தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ விபரங்கள் இன்று மாலை வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு நடந்த இந்த தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 85.03% என கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் சுமார் 4.83 கோடி பேர் வாக்களித்துள்ளனர். கடந்த தேர்தலை விட சுமார் 20 லட்சம் பேர் கூடுதலாக வாக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவான ஓட்டுகளை சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளதாக தேர்தல் கமிஷன் கூறியது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான ஓட்டுகள் குறித்த விபரங்கள் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், 17சி படிவத்தில் உள்ள பதிவுகள் மொத்த ஓட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படுகின்றன.
இந்த பணியை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் சரிபார்ப்பு பணி இன்று மாலைக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் பின்னர் தொகுதி வாரியான ஓட்டு விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





