திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட மக்கள் மன்றம் வாக்குச்சாவடியில், ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் இணைந்த வி.வி.பேட் கருவியில் கோளாறு ஏற்பட்டதால் புதன்கிழமை காலை ஓட்டுப்பதிவு தாமதமானது.

திருச்சி மாநகராட்சி 61 மற்றும் 63 வார்டுகளுக்கான இரண்டு வாக்குச்சாவடிகள் அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில், அமைச்சர் கே.என்.நேரு காலை 7.08 மணியளவில் வாக்களிக்க வந்தார். ஆனால், இரு மையங்களிலும் வி.வி.பேட் பழுதடைந்ததால் அவர் உடனடியாக வாக்களிக்க முடியவில்லை.

கோளாறு குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு மையங்களுக்கும் மாற்று வி.வி.பேட் கருவிகள் காலை 7.20 மணியளவில் கொண்டு வந்து பொருத்தப்பட்டன. இதனால் அந்த மையத்தில் ஓட்டுப்பதிவு சுமார் 35 நிமிடம் தாமதமாக மீண்டும் தொடங்கியது.

தேர்தல் நடத்தும் அலுவலர் சாலை தவவளவன் வாக்குச்சாவடிக்கு வந்து நிலைமையை பார்வையிட்டார். இயந்திரக் கோளாறால் அமைச்சர் நேரு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் காத்திருந்து பின்னர் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், காலை 6.00 முதல் 7.30 மணி வரை “எமகண்டம்” என குறிப்பிடப்படும் நேரம் இருந்த நிலையில், தாமதம் காரணமாக அமைச்சர் 7.30 மணிக்கு பிறகு, சுமார் 7.40 மணியளவில் வாக்களித்து சென்றதாக செய்தி கூறுகிறது.