ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடனான போரை முடிக்க அமெரிக்கா அவசரப்படவில்லை; ஆனால் “ஈரானுக்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது” என அவர் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஹிஸ்புல்லாவுக்கு ஈரான் வழங்கும் நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்று கூறினார். ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவுக்கு கட்டுப்பாடு இருப்பதாகவும், அதைத் திறப்பது குறித்து ஈரான் அமெரிக்காவை அணுகியதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த முன்மொழிவை தனது குழுவில் பலர் வரவேற்றதாக கூறிய டிரம்ப், ஆனால் அதை ஏற்க மறுத்ததாகவும் விளக்கினார். ஜலசந்தி திறக்கப்பட்டால் ஈரான் தினமும் சுமார் 50 கோடி டாலர் வருமானம் ஈட்டும்; பிரச்சினை முழுமையாகத் தீரும் வரை அந்த வருமானம் கிடைப்பதை விரும்பவில்லை என அவர் கூறினார்.

கடந்த ஆறு வாரங்களாக போர் நிறுத்தத்தை கொண்டு வர முயன்று வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஈரானின் ராணுவம் “முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது” என்றும், ஆயுதங்களுடன் செல்லும் படகுகள் தென்பட்டால் அவற்றை அழிப்போம் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை செயலிழந்துவிட்டதாகவும், வான்வழித் தடுப்பு அமைப்புகள் அழிந்துவிட்டதாகவும், தலைவர்கள் இல்லாமல் போய்விட்டதாகவும் டிரம்ப் கூறினார். தலைமைத்துவத்தை இழந்ததால் அவர்கள் தங்களுக்குள்ளேயே “பூனைகளும் நாய்களும் சண்டையிடுவது போல” மோதிக்கொள்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.