புதுடில்லி: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியில் தொடர்ச்சியாக நிகழும் விலகல்களுக்கு, கட்சித் தலைமையில் ஏற்பட்ட தவறுகளே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் குறித்து அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறி, முன்னணி இளம் தலைவரும் ராஜ்ய சபா எம்பியுமான ராகவ் சத்தா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவருடன் மேலும் ஆறு எம்பிக்களும் விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல் ஆகியோர் பாஜவில் இணைந்தனர். மேலும் 63 எம்எல்ஏக்கள் ராகவ் சத்தாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த மாற்றங்கள் ஆம் ஆத்மி கட்சியை குலைக்கத் தொடங்கியுள்ளதாகவும், பஞ்சாபில் ஆட்சியை இழக்கும் நிலை உருவாகலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில் ஹசாரே கூறுகையில், தனிப்பட்ட சுயநல தேவைகளுக்காக கட்சி மாறுவது சரியல்ல என்றும், இத்தகைய முடிவுகளுக்கு கட்சிக்குள் உள்ள பிரச்னைகளே காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார். கட்சி சரியான பாதையில் சென்றிருந்தால் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்காது என்றும், இந்த விவகாரத்தை ஜனநாயக முறையில் ஆராய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2011-ம் ஆண்டு நாடு முழுவதும் நடந்த ஊழலுக்கு எதிரான போராட்ட காலத்தில் அன்னா ஹசாரேவும் அர்விந்த் கெஜ்ரிவாலும் இணைந்து செயல்பட்டனர்; அப்போது நடைபெற்ற பல போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்களில் கெஜ்ரிவாலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.