சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதியில் நடந்த வாக்குப்பதிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியன் (79) மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் நாளில், தி.மு.க.வினர் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்க டோக்கன் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததாக கூறப்படுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாலசுப்பிரமணியன் அ.தி.மு.க. கொடியுடன் வள்ளுவர் கோட்டம் சந்திப்பு அருகே சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் தடுத்தபோது, அவர் சாலையில் படுத்து போராட்டத்தைத் தொடர்ந்ததாகவும், பின்னர் அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், போலீசாரை ஆபாசமாக பேசியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் பணியாற்ற விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, போலீசார் தன்னை தாக்கியதாக பாலசுப்பிரமணியன் கூறி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.