புதுடில்லி: அமெரிக்காவின் ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனம் உருவாக்கிய ‘கிளாட் மித்தோஸ்’ என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு மாதிரி, வங்கித் துறையின் சைபர் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்தார். இதுதொடர்பாக பல்வேறு வங்கிகளின் தலைவர்களுடன் அவர் உயர்மட்ட ஆய்வு கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் பகிரப்பட்ட தகவலின்படி, மனிதர்களால் எளிதில் கண்டறிய முடியாத ஆயிரக்கணக்கான நுணுக்கமான பாதுகாப்புப் பிழைகளை இந்த ஏ.ஐ. கண்டுபிடிக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக மறைந்திருந்த பாதுகாப்பு ஓட்டைகளையும் கண்டறிந்ததாகவும், அதன் மிகுந்த ‘ஹேக்கிங்’ திறன் காரணமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் விடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் அங்கீகரிக்கப்படாத சில நபர்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக வெளியான தகவல்கள் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் வங்கிகளின் ஐ.டி. அமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர் தரவுகளுக்கு உருவாகக்கூடிய ஆபத்துகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆய்வில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் பங்கேற்றார். நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய ஏ.ஐ. கருவிகளால் உருவாகும் அச்சுறுத்தல்கள் இதுவரை இல்லாத வகையில் இருப்பதால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இடையே அதிக விழிப்புணர்வு, தயார்நிலை மற்றும் வலுவான ஒருங்கிணைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

வங்கிகள் தங்களின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளையும் வாடிக்கையாளர் தகவல்களையும் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார். மேலும், அச்சுறுத்தல்களுக்கு விரைவாக பதிலளிக்க ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க இந்திய வங்கிகள் சங்கத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.