போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வணிக ரீதியான விமான சேவைகள் சுமார் 2 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
பிப்.28 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தியதாகவும், போர் தீவிரமடைந்ததால் ஈரானின் வான்வழிப்பாதைகள் முழுவதும் முடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது போர் நிறுத்தம் அமலில் இருப்பதால், ஈரானுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல், மஸ்கட் மற்றும் மதீனா நோக்கி விமானங்கள் புறப்பட்டன. இஸ்தான்புல் வழித்தடத்தில் குறைந்தது மூன்று விமானங்கள் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, பதற்றமான சூழல் நீடிப்பதால் இந்தியர்கள் ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.





