சென்னை: த.வெ.க. தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படக் காட்சிகள் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியான விவகாரத்தில், மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். இதில் திரைப்பட உதவி எடிட்டர் பிரசாதும் ஒருவர்.
போலீசாரிடம் பிரசாத் அளித்த வாக்குமூலத்தில், ஜனநாயகன் எடிட்டிங் நடந்த இடத்திலேயே தானும் நண்பர்களும் வேறொரு படத்திற்கான எடிட்டிங் பணியில் இருந்ததாக கூறியுள்ளார். அங்கு அவரது சகோதரியின் நண்பரான ஒரு மென்பொருள் பொறியாளரும் பணிபுரிந்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த நபர் பெருந்தொகை தருவதாக ஆசை காட்டியதால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஜனநாயகன் படக் காட்சிகளை திருடி வீட்டிற்கு எடுத்துச் சென்று எடிட்டிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இப்படத்தின் எடிட்டராக பணியாற்றிய பிரதீப் ராகவ் மீது தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சங்க விதிகளை மீறி, தாம் பணியாற்றும் படங்களில் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளர்களாக பயன்படுத்தியதாக சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனநாயகன் கசிவில் அவருக்கு நேரடி தொடர்பு இல்லை எனினும், கவனக் குறைவு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் பிரதீப் ராகவ் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.





