மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “அடுத்த குறி டில்லி” எனக் கூறி, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றியை உறுதி செய்த பின் தேசிய அளவில் பா.ஜ.வை அகற்றுவதற்கான முயற்சியை முன்னெடுப்பேன் என்று தெரிவித்தார்.

இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு கொல்கட்டாவின் சவுரங்கி பகுதியில் நடைபெற்ற திரிணமுல் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பா.ஜ. தங்களை வீழ்த்த முடியாது என்றும், தங்களின் போராட்டம் அநீதிக்கு எதிராகவும் உரிமைகளுக்காகவும் என்றும் கூறினார்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைப்பதன் மூலம் இதை சாதிப்பேன் என மம்தா தெரிவித்தார். தமக்கு அதிகாரமோ பதவியோ தேவையில்லை; டில்லியில் பா.ஜ.வை முற்றிலும் அகற்றுவதே விருப்பம் என்றும் அவர் கூறினார்.

மம்தாவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பா.ஜ. சார்பில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் அமித் ஷா சிரித்தபடி பதிலளித்தார். “மேற்கு வங்கத்திலேயே அவருக்கு மிச்சம் ஏதுமில்லை; அதன் பின் அவர் எப்படி டில்லிக்கு வர முடியும்?” என்று அவர் கூறினார்.