மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 72 வயது படகோட்டி கவுரங்க பிஸ்வாஸ், ஹூக்ளி நதியில் பிரதமர் நரேந்திர மோடியை படகில் அழைத்துச் சென்ற அனுபவத்தை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். கரை திரும்பியபின் பிரதமர் தன்னை அன்புடன் கட்டியணைத்ததாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்துக்காக மேற்கு வங்கம் சென்ற மோடி, நேற்று காலை 7 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்டு, கங்கை நதியின் கிளையான ஹூக்ளி நதியில் படகு சவாரி செய்தார். பின்னர் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து, கங்கை மேற்கு வங்கத்தின் “ஆன்மா வழியாக” பாய்வதாகவும், “கங்கை அன்னைக்கு” நன்றியை தெரிவிக்க இந்தப் பயணம் வாய்ப்பாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார். வித்யாசாகர் சேது மற்றும் ஹவுரா பாலத்தை அருகிலிருந்து ரசித்ததாகவும் அவர் எழுதினார்.

கவுரங்க பிஸ்வாஸ் கூறுகையில், பிரதமர் தன்னிடம் வந்து வங்காள மொழியிலேயே பெயரை கேட்டதாக தெரிவித்தார். தமக்கு ஹிந்தி சரளமாக தெரியாததால், தானும் வங்காளத்திலேயே பதிலளித்ததாக கூறினார். நதியின் மையப்பகுதிக்குச் சென்ற பிறகு பிரதமர் அதிகம் பேசவில்லை என்றும் அவர் சொன்னார்.

கரைக்கு திரும்பியபின் பிரதமர் தன்னை அருகில் அழைத்து அன்புடன் இறுகத் தழுவி கட்டியணைத்ததாகவும், அந்த சுமார் 35 நிமிடப் படகு சவாரிக்காக ரூ.1,000 கட்டணமாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சவாரிக்கான ஏற்பாடுகளை செய்த 44 வயது படகோட்டி பிரபீர் பிஸ்வாஸ் கூறுகையில், காலை 7 மணி கடந்தபின் சிலர் வந்து ஏழு படகுகளை வாடகைக்கு எடுத்ததாகவும், முதலில் காரணம் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார். படித்துறையின் படிகளில் பிரதமர் இறங்கி வருவதைக் கண்டபோதுதான் அந்த நாள் சிறப்பானதாக அமையப்போகிறது என்பதை உணர்ந்ததாக அவர் கூறினார்.