அவிநாசி தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தாம் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என வெள்ளிக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில் அவர் பழநி முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கிரிவீதியில் அவரது வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து பேட்டரி பஸ் மூலம் ரோப் கார் நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து ரோப் காரில் மலைக்கோவிலுக்கு சென்றார்.

அடிவாரத்திற்கு திரும்பிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக முறையில் அமைதியாக தேர்தல் நடைபெற்றதாக கூறினார். தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது என்றும் விமர்சித்தார்.

தமிழகத்தில் அதிகளவில் வாக்குப்பதிவு நடந்தது தி.மு.க. அரசின் மீது மக்களுக்கு உள்ள கோபத்தின் வெளிப்பாடு என முருகன் தெரிவித்தார். தி.மு.க. ஆட்சியை அகற்றவே மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும், பா.ஜ. மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் கூறினார். மேலும் தி.மு.க. அரசின் செயல்பாடு “ஜீரோ” எனவும் அவர் குற்றம்சாட்டினார்.