நியூயார்க்: ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி கடுமையாக காயமடைந்து, தற்போது செயற்கை கால் உதவியுடன் மட்டுமே நடக்க முடிகிறது என அமெரிக்க பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியின்படி, கடந்த பிப்.28 அன்று அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு வான் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில், அப்போது உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் மோஜ்தபா கமேனி உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது; ஆனால் அவரது உடல்நிலை தொடர்பான விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.

அதே தாக்குதலில் மோஜ்தபாவும் படுகாயம் அடைந்ததாகவும், அதன் பின்னர் ஈரானின் நிர்வாக அதிகாரம் ராணுவ ஜெனரல்கள் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் NYT தெரிவித்துள்ளது. போர் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை அந்த குழுவே எடுப்பதாகவும், ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குழு போல செயல்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மோஜ்தபாவின் காலில் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இனி செயற்கை கால் உதவியுடன்தான் நடக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. முகம் மற்றும் உதடுகள் கடுமையாக கருகியதால் பேசுவதற்கே சிரமம் இருப்பதாகவும், அதனால் வீடியோ செய்திகளுக்கு பதிலாக எழுத்துப்பூர்வ அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருகிய முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் NYT செய்தி குறிப்பிட்டுள்ளது.