புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் (CEC) ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்காக ராஜ்யசபாவில் தீர்மான நோட்டீஸ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 73 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட இந்த நோட்டீஸில், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தின் முதற்கட்ட தேர்தலுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றிய போது அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்ததாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அதன்பேரில் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனை வலியுறுத்திய போதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஸ் ஆகியோர், கையெழுத்திட்ட தீர்மானத்தை ராஜ்யசபா பொதுச்செயலரிடம் சமர்ப்பித்தனர். இதில், பிரதமரின் செயல்பாடு குறித்து பல எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் இதுவரை எந்த விளக்கமோ அறிவிப்போ அறிவுறுத்தலோ அல்லது பதிலோ வெளியிடவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்த இதே போன்ற முயற்சிகளை, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் ராஜ்யசபா தலைவர் மற்றும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிராகரித்ததாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.




