ராகியின் சத்தையும் சாக்லேட் சுவையையும் இணைக்கும் எளிய ஸ்நாக் தான் ‘ராகி சாக்லேட் பணியாரம்’. கோகோ மற்றும் நாட்டு சர்க்கரை சேர்வதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

தேவையான பொருட்கள்: ராகி மாவு (1 கப்), பால் (1 கப்), நாட்டு சர்க்கரை (அரை கப்), கோகோ பவுடர் (கால் கப்), சிறிதளவு எண்ணெய், பேக்கிங் பவுடர், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் நெய்.

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோகோ பவுடர், நாட்டு சர்க்கரை, பால், எண்ணெய், பேக்கிங் பவுடர், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலக்கவும்.

பணியாரக் கல்லை சூடாக்கி, குழிகளில் நெய் தடவவும். மாவை ஊற்றி மூடி வைத்து வேக விடுங்கள். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.

சூடாக பரிமாறலாம். சாக்லேட் சுவை இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பர்; ராகி சேர்வதால் ஆரோக்கியத் தன்மையும் கிடைக்கும்.