சாத்தான்குளம் தந்தை–மகன் காவல் நிலைய மரண வழக்கில், கீழமை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்த 9 போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அலைபேசி கடை நடத்தி வந்த ஜெயராஜ் (63) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர், 2020 ஜூன் 19 அன்று கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.

வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீது விசாரணை நடைபெற்றது. ஏப். 6 அன்று தீர்ப்பளித்த மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், பழிவாங்கும் நோக்கில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டு, 9 பேருக்கும் துாக்கு தண்டனை விதித்தது; இது தமிழக காவல்துறைக்கு களங்கம் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில், அதை உயர்நீதிமன்றம் பரிசீலிக்க ஆவணங்கள் அனுப்பப்படுவது நடைமுறை. அதன்படி இந்த வழக்கின் ஆவணங்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு பரிந்துரைக்கப்பட்டன. நீதிபதிகள் என். ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு இதை விசாரித்தது; 9 பேரும் மதுரை மத்திய சிறையிலிருந்து காணொலி மூலம் ஆஜரானனர்.

கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தனித்தனியாக மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்ய 9 பேருக்கும் அவகாசம் வழங்கப்பட்டதாகவும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை ஏப். 30க்கு ஒத்திவைத்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.