புதுடில்லி
ஒரு பெண், குறிப்பாக சிறுமி, தன் விருப்பத்திற்கு மாறாக கர்ப்பத்தை தொடரச் சொல்லி எந்த நீதிமன்றமும் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கருவை சுமக்கும் பெண்ணின் விருப்பமும் நலனுமே முதன்மை எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
15 வயது சிறுமி தனது ஏழு மாத கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் போது, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு இந்தக் கருத்துகளை பதிவு செய்தது. விருப்பமில்லாத கர்ப்பத்தை கட்டாயப்படுத்துவது சிறுமியின் மனநலம், கல்வி மற்றும் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடும் என நீதிமன்றம் குறிப்பிட்டது.
அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உள்ள தனிமனித சுதந்திரம் மற்றும் தனியுரிமை உரிமைகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், தன் உடல் மற்றும் இனப்பெருக்கம் குறித்து முடிவு எடுக்கும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பதாக தெரிவித்தது. தேவையற்ற கர்ப்பத்தை சுமக்கச் சொல்லுவது அடிப்படை உரிமைகளை பறிப்பதற்குச் சமம்; இது ஈடு செய்ய முடியாத மன உளைச்சலும் உடல் பாதிப்பும் ஏற்படுத்தும் என்றும் கூறியது.
மேலும், இத்தகைய வழக்குகளில் அனுமதி மறுக்கப்பட்டால் ரகசியமாக இயங்கும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மையங்களை நோக்கி செல்லும் சூழல் அதிகரித்து, கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என நீதிமன்றம் எச்சரித்தது. இந்த வழக்கில் சிறுமி ஏற்கனவே இருமுறை தற்கொலை முயற்சி செய்ததாக குறிப்பிடப்பட்ட நிலையில், தகுந்த மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் 28 வார கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.





