புதுடில்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் முதல் கட்டத்தில் பதிவான 92.88% ஓட்டுப்பதிவு “மகிழ்ச்சி அளிப்பதாக” உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில், கடந்த ஆண்டு எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் முடிவில் இரட்டை குடியுரிமை, இறந்தவர்கள் உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிட்டு 90 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், வாக்காளர்கள் எண்ணிக்கை 7.66 கோடியில் இருந்து 6.75 கோடியாக (சுமார் 12% குறைவு) வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஏப்.29 அன்று மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சில இடங்களில் வேட்பாளர்கள் மீது தாக்குதல், கல்வீச்சு போன்ற சம்பவங்கள் கூறப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் அமைதியாகவே ஓட்டுப்பதிவு முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அளவிலான ஓட்டுப்பதிவு சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில் மாநிலத்தில் முதன்முறையெனவும் கூறப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, எஸ்.ஐ.ஆர். காரணமாக தங்களால் வாக்களிக்க முடியவில்லை என 65 தேர்தல் அலுவலர்கள் உட்பட சிலர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்தது. மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், எஸ்.ஐ.ஆர். தொடர்பான புகார்களுக்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.
இதையடுத்து, “முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஓட்டுப்பதிவு நடந்துள்ளது; நாட்டின் குடிமகனாக இதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என தலைமை நீதிபதி கூறினார். மூத்த வழக்கறிஞர் கல்யாண் பானர்ஜி, மக்கள் ஓட்டுரிமையின் அதிகாரத்தை உணர்ந்தால் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என குறிப்பிட்டார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதை வரலாற்றுச் சாதனை என தெரிவித்தார். தேர்தல் ஆணையத் தரவுகளின்படி ஆண்களை விட பெண்கள் அதிக சதவீதத்தில் வாக்களித்ததுடன், மூன்றாம் பாலினத்தவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்றனர்.





