தமிழகத்தில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அதிக பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ஓட்டுநர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொத்த தேவையில் 30 முதல் 40 சதவீதம் வரை பற்றாக்குறை இருப்பதாக கூறப்படும் நிலையில், பஸ் மற்றும் லாரி உரிமையாளர்கள் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஓட்டுநர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
சென்னை, மும்பை, டில்லி, பெங்களூரு, ஆமதாபாத் போன்ற பெரிய நகரங்களில் பயணியர் மற்றும் சரக்கு வாகனங்களின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் 3.80 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இதில் 3.20 கோடி இருசக்கர வாகனங்கள். வாடகை கார், வேன் பிரிவுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இலகு ரக வாடகை வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
தமிழக போக்குவரத்து துறையில் அரசு பஸ் ஓட்டுநர்கள் உட்பட 19.12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டுநர்களாக பதிவு செய்திருந்தாலும், அது போதாது என சங்கங்கள் தெரிவிக்கின்றன. அரசு பஸ்களை ஓட்டுபவர்களைத் தவிர, பிற பயணியர் வாகன ஓட்டுநர்களில் பலர் முழுநேர பணியில் இல்லாததால், வார இறுதி மற்றும் பண்டிகை நாட்களில் வாகனங்களை இயக்குவதில் சிக்கல் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
சென்னை சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், 12 பேர் வரை செல்லும் வாகனங்களை இயக்க ‘பேட்ஜ்’ எனும் சிறப்பு உரிமம் தேவையில்லை என்ற மத்திய அரசின் விலக்கு உத்தரவு தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டினர். அந்த விலக்கை உடனடியாக அமல்படுத்தினால் ஓட்டுநர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம், மாநிலம் முழுவதும் இயக்கப்படும் 4,700 தனியார் பஸ்களுக்கு தேவையான ஓட்டுநர்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக கூறியுள்ளது. ஓட்டுநர் தொழிலுக்கு வர ஆர்வம் குறைவதாகவும், சம்பளம் குறைவாக இருந்தாலும் பலர் வேறு பணிகளுக்கு மாறுவதாகவும் தெரிவித்தது. புதிய ஓட்டுநர்களை உருவாக்க இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் ஓட்டுநர்கள் கிடைக்காததால் அசாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பயிற்சி பெற்ற ஓட்டுநர்களை தேர்வு செய்து தமிழகத்தில் பஸ்களை இயக்க ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளதாகவும் சம்மேளனம் கூறியுள்ளது.





