தென் மாநிலங்களில் மின் தேவை அதிகமாக உள்ள மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய மின் துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் மின் தேவை விவரங்களை மத்திய மின் துறை வெளியிட்டுள்ளது. 2025 மார்ச் மாதத்துடன் கடந்த மார்ச் நிலவரத்தை ஒப்பிடுகையில், தென் மாநிலங்களின் தினசரி மின் தேவை 69,934 மெகாவாட்டில் இருந்து 73,805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மின் தேவை 19,679 மெகாவாட்டில் இருந்து 19,822 மெகாவாட்டாக உயர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா (13,107 இருந்து 14,011), தெலுங்கானா (17,162 இருந்து 18,548), கர்நாடகா (18,395 இருந்து 18,655), கேரளா (5,334 இருந்து 5,844) ஆகிய மாநிலங்களிலும் தேவை உயர்ந்துள்ள நிலையில், புதுச்சேரியில் மட்டும் 483 மெகாவாட்டில் இருந்து 476 மெகாவாட்டாக சிறிதளவு குறைந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மாலை நேரங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின் துறை மின் வாரியத்துக்கு எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர், தேவை-விநியோக நிலவரத்தை முன்கூட்டியே மதிப்பீடு செய்து பற்றாக்குறையை சமாளிக்க மின் கொள்முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.





