தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெயில் தீவிரம் அதிகரிக்கக்கூடும்; உள் மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அறிக்கையில், மஹாராஷ்டிராவின் கிழக்கு விதர்பா பகுதியிலிருந்து குமரிக் கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீள்கிறது என கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளிலும் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.
அதே நேரத்தில், ஏப்.24 முதல் உள் மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகலாம் என்றும், இதனால் வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




