சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு அமைதியாக முடிந்த நிலையில், தொகுதி வாரியான துல்லிய ஓட்டுப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

234 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கு 5.73 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர்; 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி ஆகியவை மோதிய நான்கு முனை போட்டியில், அரசியல் கட்சிகளின் 935 வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 4,023 பேர் போட்டியிட்டனர்.

இதுவரை கிடைத்த தகவலின்படி, 85.15% ஓட்டுகள் பதிவாகியுள்ளன; சுமார் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். 85 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை. ஓட்டுப்பதிவு முடிந்ததும் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டு, தேர்தல் பறக்கும் படைகள் திரும்ப பெறப்பட்டதுடன் வாகன சோதனைகளும் நிறுத்தப்பட்டன; மறு ஓட்டுப்பதிவு கோரி எந்த புகாரும் வரவில்லை.

தமிழக தலைமை தேர்தல் அலுவலக வட்டாரத்தினர் கூறுகையில், ஓட்டுப்பதிவு முடிந்த பின் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்தும் படிவம் 17சி சரிபார்க்கப்பட்டு தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படும் என்றும், அதனுடன் வாக்காளர்கள் பயன்படுத்திய அடையாளம் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் ஆண்-பெண்-மூன்றாம் பாலினத்தவர் ஓட்டுப்பதிவு போன்ற துல்லிய புள்ளிவிவரங்களும் பதிவேட்டில் இடம்பெறும் என்றும் தெரிவித்தனர்.

ஆனால், 10 மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இன்னும் துல்லிய ஓட்டுப்பதிவு அறிக்கையை அனுப்பவில்லை என்றும், அந்த மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளின் பதிவுகளை சரிபார்க்க வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டது. சரிபார்ப்பு முடிந்து அறிக்கைகள் வந்ததும், தேர்தல் கமிஷன் முறைப்படி இறுதி ஓட்டுப்பதிவு விவரங்களை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டது.