தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட தற்போதைய வி.சி.க எம்எல்ஏக்களுக்கு கட்சியில் புதிய பொறுப்புகளை வழங்கி, கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
வி.சி.க சார்பில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பாபு ஆகிய மூவருக்கும் மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. இது அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்ட விஷயமாக மாறியது.
இந்நிலையில், எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜிக்கு கட்சியின் மாநில பொருளாளர் பதவியும், எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு மாநில முதன்மைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீட் மறுக்கப்பட்டதற்கு உள்நோக்கம் இல்லை என்று திருமாவளவன் தொடர்ந்து கூறி வந்தார். அதே நேரத்தில், கட்சிக்குள் கடுமையான கோஷ்டி பூசல் இருப்பதாகவும், சில எம்எல்ஏக்கள் திமுகவுடன் நேரடியாக தொடர்பில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியான நிலையில், ஷாநவாஸ் தன்னறியாமல் திமுகவுடன் நேரடியாக பேசியதாக உறுதி செய்வதுபோல் திருமாவளவன் பேட்டி அளித்திருந்தார்.
கட்சியினர் கூறுவதாவது, அதிருப்தி மற்றும் கோஷ்டி பூசலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தகைய பதவி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





