உத்தர பிரதேசம் ஆக்ரா பெலன்கஞ்ச் பகுதியில் உள்ள கனரா வங்கி கிளை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, இடிபாடுகளில் பணம் தேடி மக்கள் திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுமார் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அந்த கிளையின் அருகே வணிக வளாகம் கட்டுவதற்காக சுமார் 40 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டடம் பலவீனமடைந்து ஒரு பகுதி சரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் மதிய நேரத்தில் நடந்ததால் வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இல்லை; இதனால் பெரிய அளவிலான உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டடம் சரிந்ததும், இடிபாடுகளுக்குள் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சிக்கியுள்ளதாக வதந்தி பரவியது.

இதையடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோணி பைகளுடன் வந்து இடிபாடுகளுக்கு இடையே பணத்தைத் தேடத் தொடங்கினர். நிலைமை மோசமானதால் வங்கி அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்; போலீசார் வந்து கூட்டத்தை கலைத்து பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இடிபாடுகளில் இருந்த ரூ.25 லட்சம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மற்றொரு கிளைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிக்கியிருந்த லாக்கர்களை துளையிட்டு மீட்பு குழுவினர் அதிலிருந்த நகைகள் மற்றும் ஆவணங்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.