இந்தியா முழுவதும் ஆபாசத்தை அடிப்படையாகக் கொண்ட சைபர் மிரட்டல் மற்றும் பணம் பறிப்பு மோசடிகள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களை குறிவைத்து, சிக்கவைத்து வீடியோ காட்சிகளை பதிவு செய்து பணம் கேட்கும் கும்பல்கள் செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.

இன்றைய டிஜிட்டல் சூழலில் அறிமுகமில்லாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதும், வீடியோ கால் மூலம் ஆபாசமாக நடந்து கொள்வதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என போலீசார் கூறினர். வீடியோ, ஆடியோ, புகைப்படம் எதுவும் பதிவு ஆகாது என்ற தவறான நம்பிக்கை ஆபத்தானது என்றும் வலியுறுத்தினர்.

சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்; தெரிந்த நபர்களாக இருந்தாலும் அந்தரங்க விஷயங்களை பகிரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண்கள் அறிமுகமில்லாத மோசடி கும்பல்களிடம் சிக்குவதும், பெண்கள் காதலன் அல்லது நண்பன் போன்றவர்களிடம் படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பின்னர் பிரச்னையில் சிக்குவதும் நடைபெறுகிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து தவறான காட்சிகளாக உருவாக்கி மிரட்டுவது, தனிப்பட்ட வீடியோக்களை வைத்து பணம் கேட்பது போன்ற சம்பவங்களும் குறிப்பிடப்பட்டன. இத்தகைய சூழலில் பயந்து பணம் கொடுப்பது பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தும் என்பதால், உடனடியாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.