உலகம் தொடர்ந்து நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டு வரும் சூழலில், புத்த பகவானின் கொள்கைகள் மற்றும் போதனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
மன் கி பாத் உரையில், புத்தரின் வாழ்க்கை போதனைகள் இன்றும் பொருத்தமானவை என்று மோடி கூறினார். அமைதி என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்து தொடங்குகிறது என்றும், தன்னை வெல்வதே மிகப் பெரிய வெற்றி என்றும் புத்தர் போதித்ததை அவர் நினைவூட்டினார்.
உலகம் எதிர்கொண்டு வரும் மோதல்கள் மற்றும் பதற்றங்களை குறிப்பிட்டு, இத்தகைய காலத்தில் புத்தரின் போதனைகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன என்று அவர் தெரிவித்தார். அன்றாட வாழ்வில் அந்த மதிப்புகளை நடைமுறைப்படுத்துமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆற்றல் துறையில் இந்தியாவின் முன்னேற்றங்களை அவர் எடுத்துரைத்தார். காற்றாலை மின்சார உற்பத்தியில் இந்தியா உலகளவில் 4-வது இடத்தில் இருப்பதாகவும், உற்பத்தித் திறன் 56 ஜிகாவாட்டைத் தாண்டியுள்ளதாகவும் கூறினார். கல்பாக்கம் அணுமின் திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக நகர்வதாகவும், இது நாட்டின் அணுசக்திப் பயணத்தில் முக்கிய மைல்கல் என்றும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அணு உலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும் என்றும், முன்கூட்டியே விவரங்களை பதிவு செய்தால் கணக்கெடுப்பு சீராக நடைபெறும் என்றும் மோடி கூறினார். மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்றும், குழந்தைகள் கோடை விடுமுறையை பயனுள்ளதாகக் கழித்து புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும், கோடைக்காலத்தில் அனைவரும் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.





