வெளியிடப்படாத தனது சுயசரிதை புத்தகத்தை அரசியல் சர்ச்சைக்குள் இழுத்து, தன்னை அரசியல் வெளிச்சத்திற்குள் கொண்டு வந்தது தேவையற்றது என முன்னாள் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.

2020ல் இந்தியா–சீனா மோதல் குறித்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக்சபாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நரவனே எழுதியதாக கூறப்படும் வெளியிடப்படாத புத்தகத்தை காட்டி பிரதமர் மோடி குறித்து விமர்சனங்களை முன்வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நரவனே, எல்லைப் பதற்ற சூழல்களில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு ஆயுதப் படைகளுக்கு முழுச் சுதந்திரம் வழங்கியதாக கூறினார். இது ராணுவத்தின் மீது அரசாங்கம் வைத்திருந்த முழு நம்பிக்கையை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஒரு எழுத்தாளராக அந்த வெளியிடப்படாத நினைவுக்குறிப்பு புத்தகத்தின் இறுதி வடிவத்தை தானே இன்னும் பார்க்கவில்லை என்பதால், அது எந்த நூல் அல்லது அது எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றி கருத்து சொல்ல முடியாது என்றார். தனது சுயசரிதை புத்தகத்தை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால் வெளியீட்டை நிறுத்தி வைக்குமாறு ராணுவ அமைச்சகம் வெளியீட்டாளர்களிடம் கேட்டதாகவும், அந்த விஷயம் அங்கேயே முடிந்துவிட்டதாகவும் கூறினார்.

இதற்கிடையில், தற்போது தான் எழுதியுள்ள Unearthing Military Myths and Mysteries என்ற புதிய புத்தகம் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் உள்ள சுவாரஸ்யமான கதைகளை உள்ளடக்கியதாகவும், “ஜெய் ஹிந்த்” முழக்கத்தின் தோற்றத்தை ஆராய்ந்தபோது அதன் பின்னணி ஆழமானது என்பதை அறிந்ததாகவும் நரவனே தெரிவித்தார்.