மேற்கு வங்கத்தில் பாஜ வளர்ச்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியே “வழி திறக்கிறார்” என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். 2வது கட்ட தேர்தலை முன்னிட்டு ஹூக்ளி மாவட்டம் ஸ்ரீராம்பூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார்.

அமலாக்கத்துறை தன்னை ஐந்து நாட்கள் தொடர்ந்து 55 மணி நேரம் விசாரித்ததாக கூறிய ராகுல், மம்தா பானர்ஜி எத்தனை மணி நேரம் விசாரிக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பினார். மேற்கு வங்க முதல்வர் மீது அமலாக்கத்துறையோ அல்லது சிபிஐயோ எந்த விசாரணையும் நடத்தவில்லை என்றும், அது அவர் பாஜவை நேரடியாக எதிர்க்காததால்தான் நடக்கிறது என்றும் அவர் கூறினார்.

தான் தற்போது ஜாமினில் இருப்பதாகவும், தனது வீடும் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டதாகவும் ராகுல் தெரிவித்தார். தன் மீது 36 வழக்குகள் உள்ளதாக கூறிய அவர், அவற்றுக்காக 10–15 நாட்களுக்கு ஒருமுறை ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விசாரணைக்காக பயணம் செய்ய வேண்டியிருப்பதாக சொன்னார்.

மேலும், பாஜவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் கட்சி காங்கிரஸ் மட்டுமே என்றும், பிரதமர் மோடி தன்னையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவையும் தொடர்ந்து தாக்கிப் பேசுவதாகவும் அவர் கூறினார். மம்தாவை தேர்தல் நேரத்தில் மட்டுமே மோடி விமர்சிப்பார்; தேர்தல் முடிந்த பிறகு அவர் ஒரு வார்த்தையும் பேச மாட்டார் என்றும் ராகுல் குற்றம்சாட்டினார். மேற்கு வங்கத்தில் வேலை கிடைக்க வேண்டுமெனில் திரிணமுல் காங்கிரஸில் உறவினர் தொடர்பு இருக்க வேண்டும்; இல்லையெனில் வேலை கிடைக்காது என்றும், மம்தா கட்சியின் குண்டர்கள் மற்றும் தொண்டர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறார் என்றும் அவர் கூறினார்.

இறுதியாக, மோடி ஊழலில் ஈடுபடுகிறார் என்றால் மம்தாவும் அதற்கு சளைத்தவர் அல்ல என்று கூறிய ராகுல், மக்கள் நலனுக்காக மம்தா செயல்பட்டிருந்தால் பாஜ இந்த மாநிலத்தில் ஊடுருவ முடியாது என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.