லக்னோ: உத்தர பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதத்தில் முடிவடைவதால், மார்ச் இறுதி–ஏப்ரல் காலகட்டத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கட்சி தலைமையிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதாக பேசப்பட்டாலும், அடுத்த சட்டசபை தேர்தலிலும் யோகியே முதல்வர் வேட்பாளர் என பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார். இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ். தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உ.பி. தேர்தல் விவாதம் 2027 ஜனாதிபதி தேர்தலுடனும் இணைத்து பேசப்படத் தொடங்கியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பதவிக்காலம் 2027 ஜூலையில் முடிவடைகிறது. உ.பி. முதல்வராகவும் மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ள, தற்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங் பெயர், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கட்சிக்குள் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

வட மாநில அரசியலில் ஜாதி கணக்கீடு முக்கியம் என்பதையும், ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்நாத் சிங்கிற்கு உ.பி.யில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இருப்பதையும் சுட்டிக்காட்டி, அவரை முன்னிறுத்துவது சட்டசபை தேர்தலில் பா.ஜ.க்கு ஆதரவாக அமையலாம் என ஒரு தரப்பு நம்புகிறது. உ.பி.யிலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் மாநிலத்திற்கு பெருமை என்ற உணர்வும் வாக்காளர்களை ஈர்க்கலாம் என்ற கருத்தும் கட்சிக்குள் உள்ளது.

ஆனால், உ.பி. தேர்தல் முடிந்த பிறகு வேறு ஒருவரை தேர்வு செய்யும் வாய்ப்பும் இருக்கலாம் என்றும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா திடீர் முடிவுகளை எடுப்பவர்கள் என்பதால், இறுதி முடிவு மாறக்கூடும் என்றும் மற்றொரு தரப்பு பேசுகிறது.