ஜெய்ப்பூர்: நீதிமன்றங்களுக்கு வெளியே வழக்குகளைத் தீர்க்கும் மாற்றுத் தீர்வு முறைகளில் (ADR) ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அனுபவத்தை திட்டமிட்ட முறையில் பயன்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார். இதற்காக தேசிய அளவிலான பதிவேடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான மாநாட்டில் பேசிய அவர், மத்தியஸ்தம், லோக் அதாலத், சமரசம் மற்றும் நடுவர் மன்றம் ஆகியவை மாற்று வழிகள் மட்டுமல்ல; கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நீதி கிடைப்பதற்கான முக்கிய வாயிலாகவும் உள்ளன என்றார். மக்கள் புரிந்துகொள்ளும் மொழியில், துரிதமாக வழங்கப்படும் நீதியே உண்மையான நீதி எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஓய்வு பெற்ற பின் நீதிபதிகளின் அனுபவம் பயன்படுத்தப்படாமல் போவது நாட்டிற்கு பெரிய இழப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக வணிகம் மற்றும் குடும்பச் சிக்கல்களில் நடுநிலையுடன் தீர்வு காணும் மத்தியஸ்தர்களாக அவர்களின் பங்களிப்பை பெறலாம் என்றார்.
மேலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் பொதுமக்களுக்கு சட்ட உரிமைகளை எளிய மொழியில் எடுத்துரைக்கும் சட்டக் கல்வியாளர்களாகவும் அவர்களை பயன்படுத்தலாம் என கூறினார். ஒரு பிரச்னை நீதிமன்ற வழக்காக மாறுவதற்கு முன்பே, மாவட்ட மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் வழியாக ஆலோசனை வழங்கி சமரசம் ஏற்படுத்தவும் அவர்களால் உதவ முடியும் என்றார்.
அடுத்த தலைமுறை வழக்கறிஞர்கள் மற்றும் மத்தியஸ்தர்களுக்கு வழிகாட்டும் ஆலோசகர்களாகவும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் செயல்படலாம் என அவர் தெரிவித்தார். அவர்களின் அனுபவம் விலைமதிப்பற்றது; தேவைக்காலத்தில் உதவும் சேமித்த நீரைப் போல அது சமூகத்திற்கு துணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.





