வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கான விருந்து நிகழ்ச்சி வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றபோது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த வேளையில் உள்ளே புகுந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் டிரம்பை பாதுகாப்பாக வெளியேற்றினர்; பின்னர் போலீசார் சந்தேகநபரை பிடித்தனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வட்டாரங்கள் தெரிவித்தன. முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட நபர் கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயதான கோல் அலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்; அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகநபரின் புகைப்படத்தை டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, துரிதமாக செயல்பட்ட பாதுகாப்புக் குழுவுக்கு நன்றி தெரிவித்தார்.
நிருபர்களிடம் பேசிய டிரம்ப், பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருந்ததாக கூறினார். மேலும், ஈரானுடன் இந்த சம்பவத்திற்கு தொடர்பு இருப்பதாக தாம் கருதவில்லை என்றும், இருப்பினும் உறுதியாக தெரியாது என்றும் தெரிவித்தார்.





