தாய்லாந்திலிருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 22 புத்த துறவிகளிடம் இருந்து ரூ.110 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இலங்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 25 இரவு கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான நிலையத்தில் அவர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன. சோதனையில் மொத்தம் 110 கிலோ அளவிலான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஒவ்வொருவரிடமும் சுமார் 5 கிலோ வரை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பள்ளி உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பொட்டலங்கள் வைத்திருந்த சாமான்பெட்டிகளில் உள்ள ரகசிய அறைகளில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடத்தலை மறைக்க முயன்றதாக சந்தேகம் எழுந்துள்ளது.
விசாரணையில், ஏப்ரல் 22 அன்று ஒரு ஸ்பான்சர் வழங்கிய டிக்கெட்டின் மூலம் இவர்கள் தாய்லாந்தின் பாங்காக்கிற்கு சென்றதாக தெரிய வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்த போது வெளிநாடுகளில் வழக்கமான உடை அணிந்திருந்த புகைப்படங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து 22 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடத்தல் பின்னணியில் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை தொடர்கிறது.





