தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார்.
சென்னையிலிருந்து காலை 10 மணியளவில் தனி விமானத்தில் மதுரை சென்ற அவர், மனைவி துர்காவுடன் பயணித்தார். விமான நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு அவர்களை வரவேற்றார்.
தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் வாய்மொழி பதில் அளிக்காமல், வலது கையின் கட்டை விரலை உயர்த்தி ‘தம்ஸ் அப்’ சைகை காட்டி சென்றார்.
பின்னர் காரில் புறப்பட்டு மதியம் 3 மணியளவில் கொடைக்கானல் பாம்பர்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்றார். வழியெங்கும் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றதால், சில இடங்களில் வாகனத்தை நிறுத்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டு பரிசுப் பொருட்களையும் பெற்றார்.
முதல்வர் ஏப்.29 வரை கொடைக்கானலில் தங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தங்கியுள்ள விடுதியைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், வெள்ளிக்கிழமை காலை 6 மணிமுதல் அவர் சென்னை திரும்பும் வரை கொடைக்கானல் நகரப் பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.





