நாடு முழுவதும் மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகள் (ஐ.சி.யு.) தொடர்பான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த, “போர்க்கால அடிப்படையில்” செயல் திட்டம் தயாரிக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஐ.சி.யு. சிகிச்சை தரம் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதிகள் அசானுதீன் அமனுல்லா மற்றும் மகாதேவன் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. மருத்துவ நிபுணர்கள் முன்வைத்த ஆலோசனைகளில், ஐ.சி.யு. சரிபார்ப்பு பட்டியல்கள், நோயாளியின் நிலையைப் பொருத்து அருகிலுள்ள மருத்துவமனைகளை கண்டறியும் வசதி உருவாக்கம், மருத்துவ உபகரணங்களை கையாள ஊழியர்களுக்கு திட்டமிட்ட பயிற்சி போன்றவை இடம்பெற்றதாக நீதிமன்றம் கவனத்தில் எடுத்தது.
உத்தரவின்படி, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை செயலர்கள் மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து ஒரு வாரத்திற்குள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஐ.சி.யு. வழிகாட்டுதல்களுக்கான தரநிலை செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும். மேலும் மனிதவளம், உபகரணங்கள் மற்றும் அடிப்படை தேவைகளில் மிக அவசியமானவற்றை அடையாளம் கண்டு, முதல் கட்டமாக ஐந்து முக்கிய முன்னுரிமை பணிகளை பட்டியலிடவும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர்களை விட 24 மணி நேரமும் நோயாளிகளுடன் இருப்பது செவிலியர்களே என்பதால், ஐ.சி.யு. சூழலை கையாள சிறப்பு பயிற்சி மற்றும் பாடத்திட்டங்கள் அவசியம் என அமர்வு வலியுறுத்தியது. இதற்காக இந்திய செவிலியர் கவுன்சிலும் இந்திய துணை மருத்துவ கவுன்சிலும் வழக்கில் எதிர்வாதிகளாக சேர்க்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மேலும், மத்திய சுகாதாரத் துறை இந்த உத்தரவுகளை உடனடியாக அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்து, தன் இணையதளத்திலும் பதிவேற்ற வேண்டும் என கூறப்பட்டது. மாநில அரசுகள் அளிக்கும் வரைவு அறிக்கைகளின் அடிப்படையில், மத்திய சுகாதாரத் துறை மூன்று வாரங்களுக்குள் நாடு தழுவிய பொதுவான வழிகாட்டுதலை தயாரித்து அடுத்த விசாரணை நாளில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; விதிகள் காகிதத்தில் மட்டுமல்லாமல் களத்தில் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வலுவான அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.





