புதுடில்லி: பீஹாரில் லஞ்ச வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் “எலிகளால் அழிக்கப்பட்டது” என்ற தகவலைக் குறிப்பிட்டு, இது மாநிலத்திற்கு பெரிய வருவாய் இழப்பாகும் என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வழக்கு 2014ஆம் ஆண்டைச் சேர்ந்தது. குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரியாக பணியாற்றிய பெண் அதிகாரி, ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக பிடிபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் பாட்னா உயர் நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து பெண் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அடுத்த உத்தரவு வரும் வரை நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

மேல்முறையீடு நீதிபதிகள் ஜே.பி. பர்த்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஒரு பத்தியை நீதிபதிகள் மேற்கோள் காட்டினர். அதில், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் பொருட்கள் பாதுகாப்பு அறையில் முறையாக பராமரிக்கப்படாததால் எலிகள் மற்றும் பூச்சிகளால் சேதமடைந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதைக் கண்ட நீதிபதிகள் ஆச்சரியம் தெரிவித்ததுடன், இத்தகைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் உள்ளிட்டவை பாதுகாப்பாக வைக்கப்படாததால் எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது என கேள்வி எழுப்பினர். கூறப்பட்ட விளக்கம் நம்பத்தகாததாக இருப்பதாகவும் குறிப்பிட்டு, பெண் அதிகாரிக்கு ஜாமின் வழங்கி, பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தனர்.