கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. கோடை உச்சம் வருவதற்குமுன்னே வெப்பம் அதிகரித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

வெள்ளிக்கிழமை மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 40.2°C ஆக பதிவானது. அதற்கு அடுத்ததாக கரூர் பரமத்தியில் 39.5°C வெப்பம் நிலவியது; தருமபுரி மற்றும் மதுரை விமான நிலையத்தில் தலா 39°C பதிவானது.

திருச்சியில் 39.1°C, ஈரோட்டில் 39.2°C வெப்பம் பதிவாகியது. சென்னை, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட நகரங்களிலும் வெப்பம் கடுமையாக இருந்தது.

வெப்பம் தொடர்ந்து உயர்வதால் வீடுகளில் மின்நுகர்வு அதிகரித்து, மொத்த மின்தேவையும் உயர்ந்து காணப்படுகிறது. சூட்டை தணிக்க இளநீர், நொங்கு, பழ ரசங்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்தினர்.

அடுத்த சில நாட்களும் இதே நிலை நீடிக்கலாம் என்பதால், வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியிடங்களுக்கு செல்லாமல் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.