திருப்பூரில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆராதனா தினத்தை முன்னிட்டு, பி.என். ரோடு ராம் நகரில் உள்ள சாய் மந்திரில் ஸ்ரீ சத்யசாய் சேவா மையம் நாள் முழுவதும் ஆன்மிக நிகழ்ச்சிகளும் மக்கள் சேவையும் இணைந்த விழாவை நடத்தியது.

அதிகாலை 5 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் ஓம்கார நாதம், சுப்ரபாதம் ஒலிக்க ‘நகர சங்கீர்த்தனம்’ நடைபெற்றது. பாபாவின் திருநாமம் முழங்க வீதிகளில் பக்தர்கள் வலம் வந்ததைத் தொடர்ந்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, பிரசாந்தி கொடி ஏற்றப்பட்டது.

‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற பொன்மொழிக்கேற்ப, நாராயண சேவை (அன்னதானம்) ஏற்பாடுகளில் பக்தர்கள் முந்தைய இரவிலிருந்தே ஈடுபட்டனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய சேவையில் 1,100 பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதத்தை பெற்றனர்.

மாலை வேளையில் வேத பாராயணமும், சிறப்பு பஜனையும் நடைபெற்றன. தேசிய தலைமை தத்துவத் திட்டத்துடன் தொடர்புடையவரும் முன்னாள் பால விகாஸ் மாணவருமான காளி விக்னேஷ் ஆற்றிய உரை, பாபாவின் போதனைகளை நினைவூட்டியது. இறுதியில் மகா மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவடைந்தது.

ஆராதனா தின நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை காக்கும் நோக்கில் சித்திரை மாதம் முழுவதும் ‘நீர்மோர்’ வழங்கும் சேவையையும் மையத்தினர் தொடர்ந்து செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.