பாதுகாப்புத் துறையில் நீண்ட காலமாக இருந்த இறக்குமதி சார்பு நிலை மெல்ல மாறி, இந்தியா இன்று ஏற்றுமதி நோக்கில் முன்னேறி வருகிறது. இந்த மாற்றத்திற்கு பெருநிறுவனங்களுடன் சேர்ந்து, சத்தமில்லாமல் சாதிக்கும் இளம் தொழில் முனைவோர்களும் பங்களித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் 2022-ல் தொடங்கப்பட்ட ‘வீரா டைனமிக்ஸ்’ குறிப்பிடத்தக்கதாக பேசப்படுகிறது. இளைஞர் சாய் தேஜா பெட்டினேனி உருவாக்கிய கனவின் தொடர்ச்சியாக உருவான இந்த நிறுவனம், மேம்பட்ட மூலப்பொருள் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்புக் கவச உடைகள் தயாரிப்பில் கவனம் செலுத்துகிறது.
நிறுவனத்தின் ‘டார்டிகிரேட்’ ஆடை, கடும் வெப்பநிலை மாற்றங்களிலும் அணிபவரை காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவிலான உறைபனி முதல் பிளஸ் 1000 டிகிரி செல்சியஸ் வரை உள்ள வெப்பத்தையும் தாங்கும் திறன் இருப்பதாக நிறுவனம் தெரிவிக்கிறது. தீ மற்றும் அபாயகரமான வேதிப்பொருட்கள் நிறைந்த பணிச்சூழலுக்காக ‘யூ-சேப்’ எனும் கவச உடையும் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மேலும், திரவ நைட்ரஜன் போன்ற கடும் குளிர் சூழல்களில் பயன்படும் ‘டி-கிரேட் கிரையோ சேப்’ ஆடைகள் மற்றும் இமயமலைப் பகுதிகளின் உறையும் குளிரில் பணியாற்றும் வீரர்களுக்கான குறைந்த எடையிலான உறைபனி தடுப்புக் கவச உடைகளும் இந்திய தயாரிப்புகளின் தரத்தை எடுத்துக்காட்டுவதாக நிறுவனம் கூறுகிறது.
இதனுடன் ‘புராஜெக்ட் ராமா’ என்ற திட்டத்தின் மூலம், தரை-கடல்-வான் என எந்த சூழலிலும் எதிரியின் ரேடார் மற்றும் அகச்சிவப்புக் கதிர் கண்காணிப்பில் சிக்காமல் தப்பிக்கும் ‘ரேடார் மறைப்பு’ தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சி நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக ஆளில்லா விமானத் தயாரிப்பில் முன்னோடியாக கூறப்படும் ‘பின்போர்டு ரிசர்ச் லேப்ஸ்’ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




