மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக தமிழகத்தில் தங்கி கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த பல தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு சென்றதால், தமிழகத்தின் பல பகுதிகளில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப். 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேர்தலில் ஓட்டளிக்க விடுப்பு எடுத்துச் சென்றதாக கட்டுமான துறையினர் தெரிவித்தனர். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல கட்டுமான தளங்களில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் ஒடிஷா, பீஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே பெரும்பாலும் கட்டுமான பணிகளில் ஈடுபடுவதாகவும், சொந்த மாநிலங்களில் முக்கிய நிகழ்வுகள் அல்லது தேர்தல் போன்ற சூழலில் அவர்கள் ஒரே நேரத்தில் குழுவாகச் செல்வதாகவும் கூறினர். 15 முதல் 30 நாட்கள் வரை விடுப்பு எடுத்துச் சென்றுள்ள அவர்கள் திரும்பியதும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.





