தனியார் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்குவோரின் அடையாள விவரங்களை கட்டாயமாகப் பெற்று பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என சென்னை போலீசார் உத்தரவிட்டுள்ளனர். குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாகவும், அவருடன் தங்கியிருந்த சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் முன்பும் கொலை, தற்கொலை, போதைப்பொருள் பதுக்கல் போன்ற குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன என போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க விடுதி உரிமையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உத்தரவின்படி, தங்குவோரின் பெயர், முகவரி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் அடையாள அட்டை தொடர்பான விவரங்களைப் பெற்று முறையாக பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் தங்குபவர்களில் சந்தேகம் ஏற்பட்டால் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்குபவர்களை சிறப்பு கவனத்தில் கொள்ளவும், தடை செய்யப்பட்ட பொருட்கள் அறைகளில் இல்லை என்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், பதிவேடுகளை காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.