நீதித்துறையின் முக்கியப் பணிகள் குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதுமாகும்; ஆனால் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் பலமாக இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் கவலை தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.59.43 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இரு அடுக்கு நீதிமன்றக் கட்டடத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில் அவர் பேசினார். நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் 4.18 கோடி வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களிலேயே தேங்கியுள்ளதாகவும் கூறினார். இதில் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் எனவும் குறிப்பிட்டார்.
மாவட்ட நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைவாக முடிக்க அரசு, வக்கீல்கள், நீதிபதிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என நீதிபதி சுந்தரேஷ் வலியுறுத்தினார். குற்றவாளிகளை தண்டனை பெறச் செய்வதிலேயே கவனம் சுருங்காமல், குற்றத் தடுப்பும் வலுப்பெற வேண்டும்; இல்லையெனில் அடுத்த தலைமுறையும் அதே பாதையில் செல்லும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
இத்தகைய நிலுவையை குறைக்க புதிய நீதிமன்றக் கட்டடங்கள் உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த திறப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந் தர்மாதிகாரியும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி தர்மாதிகாரி, கடும் வெப்பத்தில் இரும்பு உருகி வலுப்பெறுவது போல நீதித்துறையும் அரசியலமைப்பும் மக்களுக்கு பாதுகாப்புக் கேடயமாக விளங்குகின்றன என்று கூறினார்.





