புதுடில்லி: எலான் மஸ்க்குடன் தொடர்புடைய ‘க்ராக்’ என்ற ஏ.ஐ. கருவி எக்ஸில் அளித்த அரசியல் பதில், சமூக ஊடகத்தில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

ஒரு பயனர், “நீங்கள் இந்திய குடிமகனாக இருந்தால் பிரதமர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு ‘க்ராக்’, தன்னிடம் குடியுரிமையோ வாக்குரிமையோ இல்லை என்று கூறியபோதும், கற்பனையான சூழலில் பிரதமர் நரேந்திர மோடியையே ஆதரிப்பேன் என பதிலளித்தது.

மேலும், மோடி தலைமையிலான 11 ஆண்டு ஆட்சிக்காலத்தில் நடந்த மாற்றங்களாக இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்தது, ‘டிஜிட்டல் இந்தியா’ முயற்சி, யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனையின் வேகமான வளர்ச்சி, நாடு முழுவதும் சாலை–ரயில்வே கட்டமைப்பு பணிகள் ஆகியவற்றை அது குறிப்பிட்டது.

இதற்கு மாறாக, காங்கிரஸ் தலைவர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பெரும்பாலும் அரசின் நலத் திட்டங்களை விமர்சிப்பதிலேயே கவனம் செலுத்துவதாகவும், வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், உலக அரங்கில் இந்தியாவின் நிலை போன்ற அம்சங்களில் மோடி முன்னிலை வகிப்பதாகவும் ‘க்ராக்’ தெரிவித்தது.

மேலும், “வாரிசு அரசியலை விட புள்ளிவிபரங்களே முக்கியம்” எனக் கூறி, இந்தியாவின் எதிர்காலத்திற்கு தொழில்நுட்பமும் உலகளாவிய நற்பெயரும் முக்கிய அளவுகோல்கள் என அது குறிப்பிட்டது. இந்த பதில் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.