தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவை ஆய்வு செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது.

பெரம்பூர் (சென்னை) மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிட்ட நிலையில், பெரம்பூர் தொகுதி வாக்காளர் வெங்கடேஷ் இந்த மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவில், மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்ததாக விஜய் குறிப்பிட்டிருந்தது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என அவர் கோரினார்.

வேட்புமனுவில் உண்மை விவரங்களை மறைப்பது தேர்தல் நடைமுறையை மோசடி செய்வதற்கு ஒப்பானது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், இதே கோரிக்கைகளுடன் முன்பே தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தற்போதைய மனுவை ஏற்க முடியாது எனக் கூறி நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.

மேலும், ஜெயக்குமார் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இதேபோன்ற மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.