மேற்காசிய போர் பதற்றத்தின் தாக்கமாக, ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் மூலப்பொருட்கள் செலவு உயர்வை எதிர்கொள்வதால் விலை உயர்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், இதன் தொடர்ச்சியாக விமான சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் சரக்குகளின் செலவு உயர்ந்துள்ளதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சுவையூட்டவும் தயாரிக்கவும் பயன்படும் முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட பருப்பு வகைகள் மற்றும் உலர் பழங்களின் விலை உயர்ந்ததால் நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்பட்டுள்ளது. போர் முன் காலத்துடன் ஒப்பிடும்போது, இப்போது இவ்வகை மூலப்பொருட்களின் விலை 15% முதல் 22% வரை உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கோடைக்காலத்தில் விற்பனை உச்சத்தில் இருக்கும் நேரத்தில் இந்த மூலப்பொருட்கள் விலை உயர்வு துறைக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை சமாளிக்க, ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் தயாரிக்கும் சில நிறுவனங்கள் ஏற்கனவே சுமார் 10% விலை உயர்வை அறிவித்துள்ளன; பேக்குகளின் எம்ஆர்பி விலையும் உயர்த்தப்படும் என கூறப்படுகிறது.
மூலப்பொருட்கள் விலை உயர்வும் போக்குவரத்து செலவு அதிகரிப்பும் சேர்ந்து, சில்லறை விலையை உயர்த்தாமல் வேறு வழியில்லை என நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.




