இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று புதுடில்லியில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை 2025 மார்சில் தொடங்கி, 2025 டிசம்பரில் நிறைவடைந்தது. கையெழுத்துக்காக நியூசிலாந்து வர்த்தகத்துறை அமைச்சர் டாட் மெக்கிளே தலைமையிலான குழு இந்தியா வந்தது.

ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து சார்பில் அமைச்சர் டாட் மெக்கிளே கையெழுத்திட்டனர். இதன் படி, இந்தியாவிலிருந்து செல்லும் அனைத்து வகை பொருட்களுக்கும் நியூசிலாந்தில் இறக்குமதி வரி பூஜ்ஜியமாக்கப்படும்.

மாற்றாக, நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் மரத்துண்டுகள், வைன், அவகோடா, புளூபெர்ரி, பழங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு இந்தியாவில் வரி குறைக்கப்படும் அல்லது பூஜ்ஜியமாக்கப்படும். ஆனால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படாது.

மேலும், இந்திய மாணவர்களுக்கு 5,000 நியூசிலாந்து விசாக்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.1.86 லட்சம் கோடி அளவிலான வெளிநாட்டு முதலீடு இந்தியாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.