ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகளில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படத் தகுதியில்லை என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெசாய் தெரிவித்துள்ளார்.

தகவலின்படி, பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் தொடர்பான போர் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் ஹார்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் சர்வதேச அளவில் எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சியின் மூலம் மே 1 வரை ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இரண்டாம் கட்ட பேச்சுக்கு பாகிஸ்தான் சமீபத்தில் அழைப்பு விடுத்தபோது, பாகிஸ்தானுக்கு சென்ற ஈரான் குழுவினர் அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சு நடத்த மறுத்ததாக தகவல் தெரிவிக்கிறது.

இதனால் அதிருப்தியடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க குழுவினரின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்ததாகவும், மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே எக்ஸ் தளப் பதிவில் ரெசாய், பாகிஸ்தான் நண்பர் நாடு என்றாலும் நடுநிலையாளர் பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும் என்றும், பாகிஸ்தான் அமெரிக்க நலன்களுடன் ஒத்துப்போகும் போக்குடன் அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சிப்பதைத் தவிர்க்கிறது என்றும், லெபனான் விவகாரம் மற்றும் முடக்கப்பட்ட சொத்துகள் போன்ற விஷயங்களில் அமெரிக்கா வாக்குறுதிகளை நிறைவேற்றாததைச் சுட்டிக்காட்டத் தவறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.