லக்னோவில் நடந்த விறுவிறுப்பான லீக் போட்டியில், கொல்கட்டா அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று, சொந்த மண்ணில் லக்னோ அணிக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தது. டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
கொல்கட்டா இன்னிங்ஸில் மொசின் கான் வேகத்தில் ஆரம்பமே தடுமாறியது. 15 ஓவரில் 93/7 என சரிந்த நிலையில், ரன் எடுக்க ஓடிய போது அங்கிரிஷ் ரகுவன்ஷி ‘அப்ஸ்டிரக்டிங் தி பீல்டு’ விதிப்படி ஆட்டமிழந்ததும் கவனம் பெற்றது.
அதன்பின் ரிங்கு சிங் அதிரடியாக ஆட்டத்தை திருப்பினார். 19வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி மூலம் அரைசதம் கடந்த அவர், கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் பறக்கவிட்டு 83* ரன்களில் அவுட்டாகாமல் இருந்தார். கொல்கட்டா 20 ஓவரில் 155/7 ரன் எடுத்தது; சுனில் நரைன் 4* ரன்களில் இருந்தார். லக்னோ தரப்பில் மொசின் கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
156 ரன் இலக்கை துரத்திய லக்னோவில் பன்ட் (42), மார்க்ரம் (31) நம்பிக்கை அளித்தனர்; ஆயுஷ் படோனி 24 ரன் சேர்த்தார். கடைசி ஓவரில் 17 ரன் தேவைப்பட்ட நிலையில், இறுதி பந்தில் ஷமி சிக்சர் அடித்து 155/8 என சமனாக்க, போட்டி டையாகி சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் கொல்கட்டா சார்பில் நரைன் பந்துவீச, முதல் பந்திலேயே பூரன் போல்டானார்; மார்க்ரமும் விரைவில் ஆட்டமிழந்தார். லக்னோ 0.3 ஓவரில் 1/2 என முடங்கியது. பின்னர் 2 ரன் என்ற எளிய இலக்குடன் வந்த கொல்கட்டாவுக்கு, ரிங்கு முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.





