கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் பராக்பூரில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் நேர்மையான ஆட்சியையும் மாற்றத்தையும் விரும்புகின்றனர் என்றும், “மக்கள்தான் என் குடும்பம்” என்றும் தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்டத்திற்கு வலிமை அளித்த இடமாக பராக்பூரை குறிப்பிட்ட அவர், இப்போது மாநில மாற்றத்துக்கான பாதையை அது அமைக்கிறது என்றார். மக்களிடையே வாழ்வதில்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது என்றும், மேற்கு வங்கத்திற்கு சேவை செய்வதும் காப்பாற்றுவதும் தன் கடமை என்றும் கூறினார்.
இந்த நிகழ்வே மேற்கு வங்கத்தில் தன் கடைசி பிரசாரக் கூட்டம் என தெரிவித்த மோடி, மே 4க்குப் பிறகு பாஜவின் பதவியேற்பு விழாவுக்கு திரும்புவேன் என்றும், பாஜ ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
மேடைக்கு வரும்போது பாதையின் இருபுறமும் பெரும் கூட்டம் இருந்ததாகவும், இத்தனை பேர் வருவார்கள் என கற்பனைக்கூட செய்யவில்லை எனவும் அவர் கூறினார். ஆளும் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் தொழில்துறை நடவடிக்கைகள் குறைந்ததாகவும், தொழிற்சாலைகள் மூடப்பட்டதாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான தெளிவான செயல் திட்டம் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மாநில அரசும் மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்படும் ‘இரட்டை இன்ஜின்’ அரசு இருந்தால்தான் விரைவான வளர்ச்சி சாத்தியம் என கூறிய அவர், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.




