மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.29க்குள் “ஊடுருவியோர்” அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்; இல்லையெனில் மே 4க்கு பின் அவர்கள் வெளியேற்றப்படுவர் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் போங்கானில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் அரசியல்வாதிகள் முதல் ரவுடிகள் வரை தங்களை நிர்வாகமாகவே கருதி செயல்படுவதாக குற்றம்சாட்டினார். பெண்களைத் துன்புறுத்துவோருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு துணை நிற்கிறது என்றும் கூறினார்.
மே 4க்கு பின் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அரசு அமைந்தால், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என மோடி தெரிவித்தார். சந்தேஷ்காலியைச் சேர்ந்த ரேகா பாத்ரா மற்றும் ஆர்.ஜி.கர் மருத்துவமனை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டரின் தாய்க்கு போட்டியிட வாய்ப்பளித்ததை, பெண்கள் பாதுகாப்பில் பா.ஜ.க. நிலைப்பாட்டின் சான்றாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தின் 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஏப்.23 அன்று 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு ஏப்.29 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது; பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ளது.
முதல் கட்டத்தில் 93 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு பதிவாகி சாதனை படைத்ததாகவும், அது திரிணமுல் காங்கிரஸின் ஆணவத்தை தகர்த்ததாகவும் மோடி கூறினார். இரண்டாம் கட்டத் தேர்தல் பா.ஜ.க. வெற்றியை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.





