டிஜிட்டல் முறையில் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். மாதந்தோறும் ஒலிபரப்பாகும் மன் கீ பாத் நிகழ்ச்சியின் 133வது அத்தியாயத்தில் பேசிய அவர், மக்கள் வழங்கும் தகவல்கள் அதிநவீன டிஜிட்டல் பாதுகாப்புடன் ரகசியமாக காக்கப்படும் என்றார்.

இதுவரை சுமார் 1.2 கோடி குடும்பங்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த தேசிய முயற்சிக்கு மேலும் அதிகமான பங்கேற்பு அவசியம் என தெரிவித்தார்.

அதே உரையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையிலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறிய மோடி, காற்றாலை மின் உற்பத்தி திறன் 56 ஜிகாவாட்டை கடந்துள்ளதாகவும், உலகளவில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகம், குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிப்பதாகவும், கட்ச், பதான், பனஸ்காந்தா போன்ற பகுதிகள் இன்று எரிசக்தி மையங்களாக மாறி வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றும் அவர் கூறினார்.

குடியரசு தின ‘பீட்டிங் ரிட்ரீட்’ நிகழ்ச்சியில் இந்திய இசைக்கருவிகள் மற்றும் ராகங்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாகவும், அந்த இசை ‘வேவ்ஸ்’ ஓ.டி.டி. தளத்தில் கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தேசிய ஆவணக் காப்பகம் மூலம் 20 கோடிக்கும் அதிகமான வரலாற்று ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களின் மூங்கில் தொழிலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், 2017-ல் சட்ட திருத்தம் மூலம் மூங்கில் ‘மரம்’ என்ற வகைப்பாட்டிலிருந்து ‘புல்’ வகையாக மாற்றப்பட்டதால் துறைக்கு வளர்ச்சி ஏற்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார். மேலும், “அமைதி நமக்குள் இருந்து தொடங்குகிறது” என்ற கவுதம புத்தரின் போதனைகள் இன்றைய காலத்திற்கு தேவையானவை என்றும் கூறினார்.

இதற்கிடையில், தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் திறனுள்ள வேக ஈனுலை ஏப்.6 அன்று அதன் முதல் செயல்பாட்டு நிலையை வெற்றிகரமாக எட்டியதை இந்திய அணுசக்தி திட்டத்தின் வரலாற்று மைல்கல்லாக பிரதமர் மோடி பாராட்டினார். இந்த உலை முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாகவும், 2024 மார்ச்சில் ‘கோர் லோடிங்’ நிகழ்வை நேரில் பார்த்த நினைவுகளை பகிர்ந்ததோடு, பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.