ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மூன்று அல்லது அதற்கு மேலான குழந்தைகள் பெற்றுக்கொள்வதையும் வரவேற்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை போக்குகள் குறித்து பேசிய அவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், 10 ஆண்டுகளில் அந்த இலக்கை அடைந்ததாகவும் கூறினார்.

தற்போது நிலைமை மாறியுள்ளதாக குறிப்பிட்ட நாயுடு, குறிப்பாக தென்னிந்தியாவில் வயது முதிர்ந்தோரின் விகிதம் அதிகரிப்பது போன்ற சிக்கல் உருவாகி வருவதாகவும், இது இந்தியாவுக்கு மட்டுமல்ல பல நாடுகளிலும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையால் சீனா மக்கள் தொகை குறைவைச் சந்தித்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், இப்போது “மக்கள் தொகை மேலாண்மை” என்ற அணுகுமுறையை ஊக்குவித்து வருவதாக கூறினார். முன்பு ‘ஒன்று நல்லது, இரண்டு போதும்’ என்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், தற்போது குறைந்தது இரண்டு குழந்தைகள் வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

இரண்டு குழந்தைகள் குறைந்தபட்சமாக இருக்க வேண்டும் என்றாலும், மூன்று அல்லது அதற்கு மேலான குழந்தைகள் பெற்றுக்கொள்வதையும் வரவேற்கிறேன் என்று நாயுடு மீண்டும் கூறினார்.